தமிழகம்

தொழிலாளர் வைப்புநிதி செலுத்த கெடு

செய்திப்பிரிவு

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை செலுத்தாத நிறுவனங்களுக்கு, இம்மாத இறுதிக்குள் செலுத்த தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் கெடு விதித்துள்ளது.

இதுகுறித்து, சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தொழிலாளர்கள் தாங்கள் செலுத்தும் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை சில நிறுவனங்கள் முறையாக செலுத்துவதில்லை. இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களில் இருந்து பணத்தை வசூல் செய்வதற்காக பிப்ரவரி மாதம், வசூல் மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வைப்பு நிதி செலுத்தாத நிறுவனங்களிடமிருந்து தொகையை வசூல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பல் வகை சட்டம், 1952-ன் படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை முறையாக செலுத்தாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, நிறுவனங்களின் உரிமையாளர்களின் அசையும், அசையா சொத்துக்களை முடக்குவது மற்றும் அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

எனவே, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை உடனடியாக செலுத்துமாறு அறிவுறுத்தப் படுகின்றனர்.

SCROLL FOR NEXT