நெடுஞ்சாலைகளில் விபத்து போன்ற ஆபத்துகளில் சிக்குவோ ருக்கு அவசர உதவிகள் அளிக்க வசதியாக 2 கி.மீ. தூரத்துக்கு ஒன்று என அவசரகால அழைப்பு தொலைபேசிப் பெட்டிகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வாக னங்கள், அதிவேகப் பயணம் போன்ற காரணங்களால் நெடுஞ் சாலைகளில் நடக்கும் விபத்து களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. 2012-ல் நாடு முழுவதும் நடந்த பல்வேறு விபத்துகளில் மொத்தம் 3 லட்சத்து 94 ஆயிரத்து 982 பேர் இறந்துள்ளனர். இதில், சாலை விபத்துகளால் மட்டும் 1 லட்சத்து 39 ஆயிரத்து 34 பேர் இறந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைவோருக்கு உடனடி யாக அவசர சிகிச்சை கிடைக்காத தாலேயே 30 சதவீதம் பேர் உயிரி ழப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
விபத்து பலி எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் நெடுஞ்சாலை களில் தமிழக அரசு சார்பில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நெடுஞ்சாலை களில் விபத்துகளில் சிக்கி உதவி தேவைப்படுவோருக்கு வசதி யாக அவசரகால அழைப்புக்கான தொலைபேசிப் பெட்டிகளை நாடு முழுவதும் உள்ள நெடுஞ் சாலைகளில் நிறுவ தேசிய நெடுஞ் சாலை ஆணையம் திட்டமிட்டுள் ளது. முதல் கட்டமாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் இப்பெட்டிகளை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து தேசிய நெடுஞ் சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: நெடுஞ்சாலைகளில் சாலை பராமரிப்பு, விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளோடு, சாலைகளில் பயணிகளின் பாது காப்பு வசதிகளை மேம்படுத்து வது இப்போது மிகவும் அவசிய மாகியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளில் பல பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல் படுத்தவுள்ளோம். அதில் ஒன்று தான் அவசரகால அழைப்புக்கான தொலைபேசி (எஸ்ஓஎஸ்) பெட்டி அமைக்கும் திட்டம்.
இத்திட்டத்தின்படி, நெடுஞ் சாலைகளில் ஒவ்வொரு 2 கி.மீ. இடைவெளியில் ஒரு அவசரகால அழைப்புக்கான தொலைபேசிப் பெட்டி அமைக்கப்படும். விபத்து போன்ற அசம்பாவிதம் நடந்தால், இதில் தகவல் தெரிவிக்கலாம். இதன்மூலம், விபத்து நடந்த இடம் போன்ற விவரங்களை அருகே உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்களால் மிக துல்லியமாக அறிய முடியும். ஆம்புலன்ஸ், மீட்பு வாகனங்களை உடனடியாக அனுப்பலாம்.
போலீஸார் மற்றும் மீட்புப் பணியினரும் விரைந்து செல்லமுடியும். இதனால் பல உயிரிழப்புகளைத் தடுக்கலாம்.
சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் வாலாஜாபாத் முதல் கிருஷ்ணகிரி வரை சுமார் 150 கி.மீ. தூரத்துக்கு சோதனை அடிப்படையில் அவசரகால அழைப்பு தொலைபேசிப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பயன் பாட்டைப் பொருத்து சென்னை திருச்சி, சென்னை கொல் கத்தா உள்ளிட்ட மற்ற நெடுஞ்சாலை களுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
எஸ்ஓஎஸ் என்றால் என்ன?
அவசரகால அழைப்புக்கான தொலைபேசிப் பெட்டிகளில் ‘எஸ்ஓஎஸ்’ என போடப்பட்டிருக்கும். எஸ்ஓஎஸ் என்பதற்கு ‘ஸேவ் அவர் ஷிப்’ (எங்கள் கப்பலைக் காப்பாற்றுங்கள்), ‘ஸேவ் அவர் ஸோல்ஸ்’ (எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்) என்று கூறப்பட்டாலும், எஸ்ஓஎஸ் என்பது இதற்கான சுருக்கச் சொல் அல்ல. தந்தி அனுப்பப் பயன்படும் ‘மோர்ஸ் கோடு’க்கான குறியீடுதான் எஸ்ஓஎஸ். ‘மோர்ஸ் கோடு’ முறையில் ‘மூன்று புள்ளி, மூன்று கோடு, மூன்று புள்ளி’ (…---…) இணைந்த சங்கேதச் சொல் ‘எஸ்ஓஎஸ்’ எனப்படுகிறது. அதாவது, ‘எஸ்ஓஎஸ்’ என்று தகவல் அனுப்புபவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பொருள். இது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை.