திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சீசன் அறுவடைப் பணி தொடங்கியுள்ள நிலையில் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் அங்கலாய்ப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். தனியாரிடம் அதிக கட்டணத்துக்கு அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப் பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்குப்பின் போதிய பருவமழை பெய்ததால் அணைகளிலும், குளங்களிலும், கிணறுகளிலும் திருப்திகரமாக தண்ணீர் பெருகிது. பிசான சாகுபடியில் விவசாயிகள் உற்சாகத்துடன் களமிறங்கினர். 66,454 ஹெக்டேரில் பிசான பருவத்தில் நெல் சாகுபடி நடைபெற்றது.
அறுவடைக்கு தயார்
தேவையான உரங்கள் சரக்கு ரயில்களில் வரழைக்கப்பட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், தனியார் உரக்கடைகள் மூலமாகவும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. சாகுபடி வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டதை அடுத்து, தற்போது மாவட்டம் முழுக்க நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகிவிட்டன. பல வயல்களில் நெல் மணிகள் சாய்ந்திருப்பதை அடுத்து அங்கெல்லாம் அறுவடையை தொடங்க வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இயந்திரங்கள் இல்லை
ஆனால் அறுவடைக்கு போதுமான இயந்திரங்கள் இல்லாதது அவர்களுக்கு கவலை அளித்திருக்கிறது. வேளாண்மை பொறியியல்துறையிடம் மொத்தம் 3 அறுவடை இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. கட்டுப்படியான கட்டணத்தில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி அறுவடையை மேற்கொள்ள முடியும். ஆனால் இந்த 3 இயந்திரங்களைக் கொண்டு 66,454 ஹெக்டேரில் எப்படி அறுவடையை மேற்கொள்ள முடியும் என்பது விவசாயிகளின் கேள்வி. இதனால் தனியாரிடம் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ரூ. 2,600 கட்டணம்
`வேளாண்மை பொறியியல் துறை அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ.1,415 கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் தனியாரோ ஒரு மணிநேரத்துக்கு ரூ.2,600 வசூலிக்கிறார்கள். சாதாரண விவசாயிகளுக்கு இது பெரும் சுமையாக இருக்கிறது’ என்று வடகரையை சேர்ந்த விவசாய பிரதிநிதி எஸ்.டி.ஷேக்மைதீன் தெரிவித்தார்.
வெளிமாவட்ட இயந்திரங்கள்
தற்போது திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் ஒருசில வயல்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இங்கு அறுவடைக்காக வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறி யாளர் முத்துகுமாரசாமி கூறிய தாவது:
`வேளாண்மை பொறியியல்துறை சார்பில் திருத்தணியிலிருந்து கூடுதலாக ஓர் அறுவடை இயந்திரம் வரவழைக்கப்பட்டிருக்கிறது. மேலும் கூடுதலாக அறுவடை இயந்திரங்களை வரவழைக்க திட்டமில்லை’ என்று தெரிவித்தார்.
தென்மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு போதிய அறுவடை இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பு.