தமிழகம்

பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை ஏற்றி வரும் வாகன ஓட்டுநர்களிடம் ரகசிய விசாரணை: பிரவீண்குமார் தகவல்

செய்திப்பிரிவு

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை ஏற்றி வரும் வாகன ஓட்டுநர்களிடம் மத்திய பார்வையாளர்கள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மட்டுமே உள்ளது. அதில் தலையிடும் உரிமை தலைமைத் தேர்தல் அதிகாரிக்கோ, தேர்தல் ஆணையத்துக்கோ கிடையாது. வேட்புமனுவில் ஏதேனும் ஒரு சில ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அதைத் தரக்கேட்டு 24 மணி நேரம் வரை பரிசீலனையை தள்ளிவைக்க தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.

ஒரு கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டதும், அவரது மாற்று வேட்பாளரின் மனு தானாகவே நிராகரிப் பட்டுவிடும். வேட்புமனுக்களை திரும்பப் பெற 9-ம் தேதி (நாளை) கடைசி நாளாகும். அன்று இரவுக்குள் அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிடும்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தனியார் வாகனங்களில் ஆதரவாளர்கள் அழைத்து வரப் பட்டால், அந்த செலவும் வேட்பாளர் கணக்கில் தான் சேர்க்கப்படும்.

இவ்வாறு ஆட்களை ஏற்றிவரும் வாகனங்களை மத்திய செலவினப் பார்வை யாளர்கள் ரகசியமாக கண்காணித்து வரு கின்றனர். வீடியோவும் எடுக்கிறார்கள். அந்த வாகனங்களின் ஓட்டுநர்களிடம் ரகசிய மாக விசாரித்து, எந்த வகையில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதையும் பதிவு செய்துவருகின்றனர்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

SCROLL FOR NEXT