ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலை தொடர்பாக சென்னை யில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடைபெற வுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வந்த பாக்ஸ்கான் தொழிற் சாலை, கடந்த டிச. 23-ம் தேதி உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இத னால், வேலையிழந்த தொழி லாளர்கள் 1,700 பேர், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, இன்றுடன் (10-ம் தேதி) தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படுவதாகவும், தொழிலாளர்கள் தங்களது இழப்பீட்டுத் தொகையை பிப். 9-க்குள் பெற்றுக் கொள்ளுமாறும், அதன்பிறகு தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தொழிற்சாலை நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தொழிலாளர் களின் கூட்டத்தில் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் 762 பேர் பங்கேற்றதாகவும், அவர்களில் 411 பேர் வேலை கிடைக்க தொடர்ந்து போராட வேண்டும் என்றும், 336 பேர் இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் போராட வேண்டும் என்று வலி யுறுத்தியிருப்பதால், தொழிற் சங்கங்களும் அதையே வலியுறுத்துகின்றன.
இந்த நிலையில், இந்தப் பிரச் சினை தொடர்பாக சென்னை தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தொழிற் சங்கம் சார்பில் கலந்து கொண்ட சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் கூறும்போது, ‘தொழிலாளர்களுக்கான ஜனவரி மாத ஊதியத்தை தர வேண் டும். சட்டவிரோதமாக தொழிற் சாலையை முடிய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். தொழில்தகராறுகள் சட்டத் தின் 10பி பிரிவின்படி தொழிற்சா லையைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தொழிலாளர்கள் தரப்பில் கோரப்பட்டது. தொழிலாளர் களுக்கு ஜனவரி மாத ஊதியத் தைத் தருமாறு தொழிலாளர் நலத் துறையும் அறிவுறுத்தியது. ஆனால், இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண் டால்தான் ஜனவரி மாத ஊதியம் தரப்படும் என்று ஆலை நிர்வாகம் கூறியது’ என்றார்.
இதையடுத்து, இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், நாளை மீண் டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.