பிற மதத்தினர் குறித்து தவறாகப் பேசியதாக பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான புகாரை விசாரிக்க தமிழக காவல்துறை இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த அப்துல்கபூர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: பாஜ தேசிய செயலர் ஹெச்.ராஜா சென்னையில் ஜன. 4-ம் தேதி நடைபெற்ற இந்து தர்ம பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக வலைதளமான யு டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ஹெச்.ராஜா மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஹெச்.ராஜா சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார். இது தொடர்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கலி.பூங்குன்றன் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
உள்துறைச் செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரரின் மனு குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது அவசியம் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின், ஹெச்.ராஜாவின் பேச்சு தொடர்பாக மனுதாரர் அளித்த புகார் மனுவை தமிழக காவல்துறை இயக்குநர் 8 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.