கோவை, காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள் 6 பேர் நேற்று நீக்கப்பட்டனர்.
ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் கோவை செல்வம், பேரூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் வி.திருமூர்த்தி, முன்னாள் மாநகரச் செயலாளர் காட்டூர் சோமு, சிறுபான்மையினர் பிரிவுத் தலைவர் ஏ.எம்.ரபீக், முன்னாள் கவுன்சிலர் ராம்நகர் சீனிவாசன், காங்கிரஸ் சேவாதளம் மாவட்டத் தலைவர் ஹரிகரன் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கோவை மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆறு பேருக்கும் நேற்று அனுப்பி வைத்தார்.
இது குறித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை சிவானந்தா காலனியில் கடந்த 30-ம் தேதி, நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடித்து அவர் புறப்பட்டபோது, சில காங்கிரஸார் அவரது காரை வழிமறித்து, தாக்க முற்பட்டு அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அந்த நபர்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்குவது எனவும் மாவட்ட தலைவருக்கு முழு அதிகாரம் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஒழுங்கு நடவடிக்கை, இதுபோன்று எதிர்காலத்தில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக அமையும். எனவே, அந்த நபர்களோடு கட்சியினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
சமீபத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் விலகுவதாக அறிவித்தார். அன்றைய தினத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸில் இருந்து ஒருவர் தன்னுடைய மகனுடன் வெளியேறினால் கட்சிக்கு நல்லது எனக் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காரை வழிமறித்து, சம்பந்தப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.