சுங்குவார் சத்திரம் அருகே, சாலை வளைவில் முந்திய மினிலாரி ஒன்று எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் 2 பள்ளி மாணவிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 10 மாணவிகள் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பள்ளூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் அயிமிச்சேரி, பள்ளமொளச்சூர் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி முடிந்து வீடு திரும்புவதற் காக 12 மாணவிகள் ஷேர் ஆட்டோ வில் பள்ளமொளச்சூர் புறப்பட்டனர். பள்ளூர் கஜேந்திரன் (56) என்பவர் ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்தார். அதே சாலையில் தனியார் மினி லாரி ஒன்று சோதனை ஓட்டமாக பள்ளூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. மப்பேடு செல்லும் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, சாலையின் ஒரு திருப்பத்தில் முன்னால் சென்ற டிப்பர் லாரியை, மினி லாரி முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது மினி லாரி மோதியதில், ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. இதில், பள்ள மொளச்சூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (14), சிந்து (13) ஆகிய 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஏஞ்சல் (11), சரோ (11), அகல்யா (13) ஆகிய 3 மாணவிகள் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். சுஜித்ரா (11), சுரேகா (14), மோனிஷா (14), பார்கவி (14), நான்சி (16), கீதா (15), சவுமியா (15) ஆகிய 7 மாணவிகள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, சுங்குவார் சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அயிமிச்சேரி மற்றும் பள்ளமொளச்சூர் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.