தமிழகம்

அமலுக்கு வராத நீதிபதி நியமன ஆணைய சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

நீதிபதி நியமன ஆணையச் சட்டம் இன்னும் அமலுக்கு வராத நிலையில், அந்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஒய்.கிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழுவினர் புதிய நீதிபதிகளை தேர்வு செய்கின்றனர். இதில் அரசியல் குறுக்கீடு இல்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, மத்திய அரசு நீதிபதிகள் நியமன மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு ஷரத்துகளை மாற்றியுள்ளனர். புதிய சட்டப்படி அமைக்கப்படும் குழுவில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இடம் பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் தலையீடு ஏற்படும்.

நீதித்துறையின் அதிகாரத்தைப் பறிப்பது சரியானதல்ல. எனவே தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா அறிவிப்பை அரசிதழில் வெளியிட தடை விதிக்கவேண்டும். அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் வாதிடும்போது, நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. அமலுக்கு வராத சட்டத்தை எதிர்த்து வழக்கு போடுவது முதிர்ச்சியற்றது. காரணம் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றனர். இதையடுத்து மனுதாரர் தரப்பு வாதத்துக்காக விசாரணை பிப். 24-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT