சென்னை நகரில் கொசுக்கள் மற்றும் நாய்களின் பெருக்கத்துக்கு பொதுமக்களே முக்கிய காரணம் என்று மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களுடன் நேருக்கு நேர் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து விக்ரம் கபூர் கூறியதாவது:
சென்னையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் டன் குப்பை குவிகிறது. அவற்றை 20 ஆயிரம் ஊழியர்கள் இரவு பகலாக அகற்றுகின்றனர். எனினும், குப்பை சரிவர அகற்றப்படவில்லை என 1913 என்ற எண் கொண்ட கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வருகின்றன. நாய்த் தொல்லை மற்றும் கொசுப் பிரச்சினை பற்றியும் அதிக புகார்கள் வருகின்றன.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பாத்திரங்கள், தேங்காய் மூடி, டயர், உடைந்த பானை போன்றவற்றில் தேங்கும் சுத்தமான நீரே கொசுக்களின் உற்பத்தியிடமாக உள்ளன. சென்னையில் ஓடும் கால்வாய்களைச் சுத்தப்படுத்தினால் கொசுத் தொல்லை குறைய வாய்ப்புகள் உள்ளது. நாங்கள் ஒருபுறம் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும்போது, மறுபுறம் பொதுமக்கள், கழிவுநீரை கால்வாய்களில் நேரடியாகவும், மழைநீர்வடிகால் கால்வாய்களிலும் விடுவது தொடர்கிறது.
தெருவில் குப்பைகளை கண்டபடி வீசுவதும், குப்பைத்தொட்டிகளில் வழிய வழிய குப்பைகளைக் கொட்டுவதுமே நாய்களின் பெருக்கத்துக்கு முக்கிய காரணம். குப்பையைத் தெருவில் கொட்டுவதை நிறுத்தினால் நாய்ப் பெருக்கமும் குறையும். நமது துப்புரவு ஊழியர்களின் நிலை பரிதாபமானது. அவர்கள் காலை 6 மணி முதல் மாலை வரை வேலை செய்கிறார்கள். அவர்கள் குப்பையை எடுத்துச் சென்றதும் சிலர் சாலைகளில் குப்பையை கொட்டுகிறார்கள். பிறகு அதை ஊழியர்கள் வந்து உடனே எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
குப்பை வண்டி வரும்போது குப்பையைக் கொட்ட வேண்டும். இல்லாவிட்டால் சேர்த்து வைத்து மறுநாள் வண்டி வரும்போது கொட்ட வேண்டும். நகரைச் சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு விக்ரம் கபூர் பேசினார்.