தமிழகம்

கிருஷ்ணகிரியில் திறக்கப்படாத 333 நூலகங்கள்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடங்கள் வீண்

எஸ்.கே.ரமேஷ்

தமிழகத்தில் கிராம ஊராட்சி களுக்குத் தேவையான முக்கிய அடிப்படை கட்டமைப்பு வசதி களை மேற்கொள்ள அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராமங்களுக்குத் தேவையான மயானம், சாலை, சாக்கடை கால்வாய், நூலகம் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

இதில், கிராமப் புற மாணவர்கள், பொதுமக்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவும், பொது அறிவை வளர்க்கும் விதமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில், ஊராட்சிக்கு ஒன்று வீதம் 333 நூலகங்கள் ரூ.14.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டன.

இதில் ரூ.11.99 கோடியில் கட்டிடங்களும், ரூ.2.66 கோடியில் சிறுகதை புத்தங்கள் முதல் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தேவையான ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது அறிவு புத்தகங்கள் வரை கொள்முதல் செய்யப்பட்டன.

மொழி புரிதல்

ஓசூர், தளி, சூளகிரி, கெல மங்கலம் மற்றும் வேப்பனப்பள்ளி ஆகிய ஐந்து ஒன்றியங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் வசிக்கும் கிராமங்களில் தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி புத்தகங்கள் மட்டுமே வைக்கப்பட்டதால், நூலகங்களை பயன்படுத்தாமல் அப்போதே 30 சதவீத நூலகங்கள் மூடப்பட்டன.

கட்டுமானப் பொருட்கள்

நூலகருக்கு மாதம் ரூ.750 என்ற குறைந்த அளவே ஊதியம் வழங்கியதால் நூலகர் பணிக்கு யாரும் வருவதில்லை. அதனால், நூலகர்களும் வராததால் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத் தில் அனைத்து நூலகங்களும் திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளன. திறப்பு விழா கூட காணாத பல நூலகங்கள் தற்போது ஊராட்சியில் பணிகளுக்காக வாங்கப்படும் கட்டுமானப் பொருட்கள் வைக்கும் இருப்பிடமாகவும், சில நூலகங்கள் புதர்மண்டியும், சமூக விரோதிகளின் இருப்பிடமாகவும் மாறி, பாழடைந்து வரும் கட்டிடங்களாகக் காட்சியளிக்கிறது.

இதுகுறித்து ஊராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, நூலகங்களில் அரசு விதிமுறைப்படி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நூலகர்களாக பணியமர்த்தப்பட வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.1500 ஊதியம் நிர்ணயிக்கப் பட்டது.

ஓய்வூதியமாக சுமார் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறும்நிலையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற யாரும் முன்வரவில்லை. சில நூலகங்களில் படித்த இளைஞர்கள் ரூ.750 ஊதியத்துக்கு வேலைக்கு எடுத்தும் சில மாதங்களில் அவர்களும் மற்ற பணிகளுக்கு சென்றுவிட்டனர். தற்போது மீண்டும் நூலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

SCROLL FOR NEXT