சென்னையில் கொலை குற்றங்கள் குறைந்திருப்பதாக கூடுதல் காவல் ஆணையர் ஆபாஷ்குமார் தெரிவித் துள்ளார்.
சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர் ஆபாஷ்குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சென்னையில் 2013-ம் ஆண்டில் 203 கொலை சம்பவங்கள் நடந்தன. ரவுடிகள் மோதலில் 45 பேர், ஆதாயத்திற்காக 13 பேர், குடிபோதையில் 2 பேர், உணர்ச்சிவசப்பட்டு 39 பேர், தவறான தொடர்பால் 18 பேர், குடும்ப தகராறில் 32 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2014-ல் 161 கொலைகள் நடந்துள்ளன. ரவுடிகள் மோதலில் 37 பேர், ஆதாயத்திற்காக 12 பேர், குடிபோதையில் ஒருவர், உணர்ச்சிவசப்பட்டு 29 பேர், தவறான தொடர்பால் 18 பேர், குடும்ப தகராறில் 25 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2013-ம் ஆண்டில் 2,133 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 2014-ல் 2,313 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 2013 மற்றும் 2014 ஆகிய இரு ஆண்டிலும் அம்பத்தூர் காவல் மண்டலத்தில்தான் தலா 26 கொலைகள் நடந்துள்ளன. புளியந்தோப்பு காவல் மண்டலத்தில் 2013-ல் 29 கொலைகளும், 2014-ல் 9 கொலைகளும் நடந்துள்ளன.
2013-ம் ஆண்டில் பொதுமக்களிடம் இருந்து 55 ஆயிரம் புகார் மனுக்கள் வந்தன. ஆனால் 2014-ல் 1 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.