தமிழகம்

டெல்லியில் பாஜக தோல்வி மகிழ்ச்சி அளிக்கிறது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து

செய்திப்பிரிவு

டெல்லியில் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியின் மூலம் அவர்களின் சாயம் வெளுத்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டெல்லி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய தோல்வியையும், சரிவையும் சந்தித்து உள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் டெல்லியில் தெருத் தெருவாக பிரச்சாரம் செய்தும் பலன் கிடைக்கவில்லை.

பாஜக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளில் அதன் சாயம் வெளுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், சில மாதங்களிலேயே அவர்களின் சாயம் வெளுத்துவிட்டது. டெல்லியில் பாஜக அடைந்த தோல்வி மகிழ்ச்சியை அளிக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி தேர்தலில் கிடைத்த தோல்வி நிரந்தரம் இல்லை. தற்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு கடந்த தேர்தலை விட அதிக இடங்களை மக்கள் வழங்கியுள்ளனர். எனவே, அவர்கள் நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT