தமிழக பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அதிமுகவை எதிர்த்து ஸ்ரீரங்கம் தேர்தல் களத்தில் நின்றதே ஒரு மாபெரும் வெற்றியாகக் கருதுவதாக அதன் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
மேலும், பணபலம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதால் ஸ்ரீரங்கம் மக்கள் சிந்திக்கும் வாய்ப்பையும் இழந்தார்கள் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
இக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று டெல்லி வந்தவர் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பாஜகவின் தலைமை அலுவலகத்தில் தமிழக செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது:
"தமிழகத்தை பொருத்தமட்டில் அங்கே ஒரு மாறுபட்ட சூழல் நிலவுகிறது. ஸ்ரீரங்கத்தில் எந்த ஊழலுக்கு எதிராக தேர்தல் நடைபெற்றதோ அந்த ஊழல் தலைவிரித்தாடியது. அங்கு அதிகாரபலம், பணபலம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதால் அங்கே மக்கள் சிந்திக்கும் வாய்ப்பையும் இழந்தார்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும்.
இனிமேலாவது மக்கள் ஊழலுக்கு எதிராக சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை அவர்கள் முன் வைக்கிறேன். பாஜகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்று கொள்கிறோம்.
தமிழக மக்களுக்கு கோரிக்கை
அங்கு எவ்வளவு வாக்குகள் வாங்கி இருந்தாலும் அவை ஊழலுக்கு எதிரான வாக்குகள் என்ற நிலையில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அதேநேரத்தில், தமிழக மக்களிடம் ஊழலுக்கு எதிரான மற்றும் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்ற பிரச்சாரம் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற உண்மையையும் இந்த தேர்தல் எங்களுக்கு உணர்த்துகிறது.
கூட்டணி மற்றும் மற்ற கட்சிகள் ஊழலுக்கு எதிரான போர் இது என ஒன்றுபடாமல், வேண்டிய அளவிற்கு எதிர்கட்சிகள் எடுத்து செல்லவில்லை. இடைத்தேர்தல் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று அனைவரும் புறமுதுகிட்டு ஓடுவதை போல் புறக்கணிக்கிறார்கள். இதில், ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்ட முடியாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
தேர்தல் அதிகாரிகள் மீது புகார்
இங்கு நடந்தவைகள் மீது நாம் அளித்த புகாரில் தேர்தல் ஆணையம் கடைசி இரண்டு, மூன்று நாட்களில் தான் நடவடிக்கை எடுத்தது. அதற்குள் பணப்பட்டுவாடாவில் இருந்து அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டது என்பது வேதனையான உண்மை. அங்கு நடைபெறும் இடத்தேர்தகளில் தேர்தல் அதிகாரிகளும் ஏறக்குறைய ஆளுங்கட்சிக்கு இணக்கமாக பணிபுரிந்து விடுகிறார்கள் என்பதும் வேதனையான விஷயம்.
இந்த தேர்தலை எதிர்கொண்டு ஒரு நல்ல கொள்கையுடன் போட்டியிட்டோம் என்பதைல் பாஜகவிற்கு மகிழ்ச்சி. ஊழலுக்கு எதிரான போர்களத்தில் நாம் நிற்கிறோம் என்ற செய்தியை மக்களிடம் எடுத்து சென்றதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்" என்றார் தமிழிசை சவுந்தரராஜன்.