தமிழகம்

பிப்.18-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை: மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவிப்பு

செய்திப்பிரிவு

காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்டும் திட்டத் தையும் காவிரி டெல்டாவில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தையும் தடுத்த நிறுத்த வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் பல கட்டப் போராட்டம் குறித்து தஞ்சையில் விவசாயிகளுடன் வைகோ நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த ஜன.20-ல் தஞ்சையில் நடைபெற்ற காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், முதல் கட்டமாக பிப்.18-ல் சென்னை நீங்கலாக காவிரி நீரைப் பயன்படுத்தும் 14 மாவட்டங்களின் தலைநகரங்கள் மற்றும் வட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்து வதென முடிவெடுக்கப்பட்டது.

2-வது கட்டமாக மார்ச் 11-ல் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும், 3-வது கட்டமாக மார்ச் 23-ல் காவிரி டெல்டாவில் உள்ள பெட்ரோலிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ள 2 இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டத்தை எதிர்த்து சமூக சேவகர் மேதா பட்கர் தலைமையில் பிப்.24-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் நான் உள்பட மதிமுவினர் 1,000 பேர் டெல்லி சென்று பங்கேற்கவுள்ளோம்” என்றார் வைகோ.

SCROLL FOR NEXT