தமிழகம்

வேதகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில் பக்தவச்சலேஸ்வரர் மற்றும் நான்கு வேதங்களால் உருவான மலை மீது வேதகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தி மலைக்கோயில் அமைந் துள்ளது. இந்த மலைக்கோயில் மற்றும் பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதியின், கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கிய சீரமைப்பு திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடை பெற்றன. காலை 10 மணிக்கு சிவாச்சாரியர்கள் மலைக்கோயிலின் மூலவர் விமானத்தின் மீது புனித கலசநீர் ஊற்றினர். தொடர்ந்து, திரிபுர சுந்தரி அம்பாளின் மூலவர் விமானத்தின் மீதும் புனிதநீர் ஊற்றப் பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெற்றன.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாமல்ல புரம் டி.எஸ்.பி.மோகன் தலைமை யில், 180 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம், அறநிலையத் துறை இணை ஆணையர் சிவாஜி, காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் பரணிதரன் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர். கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பாலாலயம்

திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் கிராமத்தில் உள்ள அஸ்தபுரிஸ்வரர் கோயிலில், ரூ.3.9 லட்சம் செலவில் சீரமைப்பு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், மூலவர் சன்னதிக்கு பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. இதில், கோயில் செயல் அலுவலர் கேசவராஜீ மற்றும் அப்பகுதி கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT