தமிழகம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா நாளை தொடக்கம்: இந்தியாவில் இருந்து பங்கேற்க 4,336 பேர் பதிவு

செய்திப்பிரிவு

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நாளை தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 4,336 பேர் தங்கள் பெயர் களைப் பதிவு செய்துள்ளனர்.

ராமேசுவரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது.

ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிபிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் 1913-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன்பின் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறுகிறது.

இலங்கையில் 1983-ம் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு திருவிழா நிறுத்தப் பட்டது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல 112 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப் படகுகளில் 3,278 ஆண்கள், 832 பெண்கள், 222 குழந்தைகள் என மொத்தம் 4,336 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள் ளனர். இதில் 250 பேர் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்குப் படகு உரிமை யாளர்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை இன்றி யாரும் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல முடியாது.

சுங்கத் துறையினர் சோதனைக் குப் பிறகு பிப்.28-ம் தேதி அதிகாலை 6 மணி முதல் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கச்சத்தீவுக்குப் புறப்படும். மறுநாள் மார்ச் 1-ம் தேதி திருவிழா முடிந்த பின்னர் காலை 10 மணிக்கு கச்சத்தீவில் இருந்து புறப்பட்டு அனைத்து விசைப்படகுகளும் மாலை 3 மணிக்குள் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்தடையும்.

வங்கி சேவை

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு வருபவர்கள் மதுபானங்களை எடுத்து வரவோ, மது அருந்திவிட்டு வரவோ, புகை பிடிக்கவோ, தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரவோ அனுமதி கிடையாது.

மேலும் கச்சத்தீவில் உணவு சமைக்கத் தடை விதிக்கப்பட் டுள்ளது. சேலை, கைலி, துணி வகைகள், சோப்பு, எண்ணெய் போன்றவை வியாபாரம் மற்றும் பண்டமாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஒரு நபர் ரூ.5,000 வரை எடுத்துச் செல்லாம். திருவிழாவை முன்னிட்டு கச்சத் தீவில் இந்திய ரூபாயை இலங்கை ரூபாயாக மாற்ற இலங்கை அரசு இரண்டு தினங்களுக்கு கச்சத்தீவில் வங்கி சேவையையும் அனுமதித்துள்ளது.

முதல் நாளான பிப்ரவரி 28-ம் தேதி மாலை 5 மணியளவில் அந்தோணியார் ஆலயம் முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டு திருவிழா தொடங்கு கிறது. தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலி பூஜையும், சிறப்புத் திருப்பலி பூஜையும் நடைபெறும். இரவு அந்தோணியாரின் தேர் பவனி நடைபெறும்.

விழாவின் 2-வது நாளான மார்ச் 1 ம் தேதி காலை 6 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடத்தப்படும். பின்னர் தேர் பவனியும், அதைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடையும்.

கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப் படகில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தடையை மீறி நாட்டுப் படகு மீனவர்களும் அந்தோணியார் திருவிழாவுக்குச் செல்ல ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT