தமிழகம்

நீலகிரியில் மீண்டும் புலி தாக்கியதில் தோட்டத்தில் பணிபுரிந்த பெண் பரிதாப பலி

ஆர்.டி.சிவசங்கர்

கேரள மாநில எல்லையான பாட்டவயலில் தோட்டத்தில் பணிபுரிந்த பெண்ணை உறவினர் முன்பாகவே புலி கடித்துக் கொன்றது. வனத்தில் புலியை வனத் துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி பாட்டவயல். கேரள மாநில எல்லையில் உள்ள இந்த கிராமத்தில் நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் அப்பகுதியில் தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த சிவகுமார் என்பவரின் மனைவி மகாலட்சுமி (26) என்ற பெண்ணை புலி கடித்துக் கொன்றது. இதை கண்ட மக்கள் அலறவே, புலி அங்கிருந்து ஓடிவிட்டது.

ஆத்திரமடைந்த பாட்டவயல் மக்கள், பெண்ணின் உடலை தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினரின் வாகனங்களை தாக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. கூடலூர் கோட்டாட்சியர் விஜயபாபு தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் வனத்துறையினர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

நேரில் பார்த்த பெண்

நேற்று காலை தோட்டத்தில், மகாலட்சுமியுடன் மஞ்சுளா என்ற பெண் பணிபுரிந்துள்ளார். அவர் கூறியது:

நாங்கள் காலை 11.30 மணிக்கு வேலையை முடித்து, இளைப்பாற தேநீர் அருந்திக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென வந்த புலி மகாலட்சுமியின் கழுத்தை கடித்தது. இதனால் சம்பவ இடத்திலேயே மகாலட்சுமி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் சப்தமிட, புலி அங்கிருந்து தப்பி விட்டது என்றார்.

மயக்க ஊசி குறி தப்பியது

இந்த புலியை வனத் துறையினர் கண்டறிந்துள்ளனர். புலியை கண்ட வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்த சுட்டபோது குறி தப்பியது. வனத் துறையினரை துரத்திய புலி, மீண்டும் வனத்தில் ஓடி மறைந்தது. தொடர்ந்து புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஒருவரை தாக்கியது

புலியை வனத்துறையினர் தேடி வந்த நிலையில், எதிரே வந்த ரதீஸ் (29) என்பவரை புலி தாக்கியது. படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக கேரள மாநிலம் பத்தேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், தேவாலா-கேரளா சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அச்சம்

நீலகிரியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று நபர்களை புலி கொன்றது. 22 நாட்கள் தொடர் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அதிரடிப்படையினர் கப்பச்சி கிராமத்தில் புலியை சுட்டுக்கொன்றனர். நீலகிரி மக்கள் மனித வேட்டை புலியின் பீதியிலிருந்து மீள்வதற்குள், கடந்த 9-ம் தேதி தமிழக எல்லையை ஒட்டி கேரள மாநில எல்லை மாவட்டமான வயநாட்டில் நூல்புழா வனப் பகுதியில் பாஸ்கரன் (60) என்பவரை கொன்றது.

இந்நிலையில், நான்கு நாட்களுக்குப் பின்னர் அப் பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ., தொலைவில் உள்ள பாட்டவயலில் மகாலட்சுமி என்ற பெண்ணை கொன்ற சம்பவம் நீலகிரி மக்களை மீண்டும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

SCROLL FOR NEXT