தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது அபத்தத்தின் உச்சம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி தமிழகத்தில் மின்வெட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெற்றுப் புள்ளி விவரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்.
5 ஆண்டுகளில் 23,140 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் மின் திட்டங்களைக் குப்பையில் போட்டதுதான் மிச்சம்.
மின் திட்டங்களை செயல்படுத்த 22 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்பதால் தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது அபத்தத்தின் உச்சம்.
வெளிச்சந்தையில் இரண்டு ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வாங்குவதற்கு செலவிடும் தொகையை மின் திட்டங்களில் முதலீடு செய்தால் 9000 மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றலாம் .
தமிழக அரசு கடைபிடித்துவரும் அணுகுமுறை வாடகை சோபா 20 ரூபாய். விலைக்கு வாங்கினால் 30 ரூபாய் என்ற வரிகளை நினைவுபடுத்துகிறது.
இதேநிலை தொடந்தால் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறாது. கடன் சுமை மாநிலமாகத்தான் மாறும்.'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.