நில மோசடி புகார் தொடர்பான விசாரணையின்போது மூதாட்டியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக சிபிசிஐடி-யால் வழக்கு பதிவு செய்யப்பட்ட 11 பேரில், 7 போலீஸார் உட்பட 9 பேருக்கு செங்கல்பட்டு நீதி மன்றம் நேற்று முன்ஜாமீன் வழங் கியது.
இதுகுறித்து வேலூர் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், திருக் கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (75). இவருக்கு, பெரும்புதூரை அடுத்த கொளப்பாக்கத்தில் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கிருஷ்ணவேணியின் தம்பி சுப்பிரமணி, மோசடியாக முதலில் தனது பெயருக்கும், பின்னர், தனது மகன்கள் பெயருக்கும் மாற்றி பதிவு செய்துவிட்டார். இது 10 ஆண்டுகளுக்குப் பிறகே கிருஷ்ண வேணிக்குத் தெரிய வந்தது.
இதனிடையே, அந்த நிலத்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ராமராஜன் மகன் கார்த்தி உள்ளிட்ட 3 பேருக்கு சுப்பிரமணியின் மகன்கள் விற்றுவிட்டனர். அதைத் தொடர்ந்து, கிருஷ்ணவேணி மீது ராமராஜன் கொடுத்த நில அபகரிப்புப் புகார் தொடர் பாக அப்போதைய நில அபகரிப் புப் பிரிவு டிஎஸ்பி மணவாளன் உள்ளிட்ட 9 போலீஸார் கிருஷ்ண வேணியிடம் விசாரித்தனராம். அப்போது, அவர்கள் துப்பாக்கி யைக் காட்டி கிருஷ்ணவேணியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், பதிவாளர் அலுவல கத்துக்கு கிருஷ்ணவேணியை இழுத்துச் சென்று, மகன்கள் பெயருக்கு அளித்திருந்த தான உரிமையை ரத்து செய்ய வைத் தனராம்.
இதுதொடர்பாக கிருஷ்ண வேணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது.
சிபிசிஐடி பிரிவினர் விசாரணை நடத்தி டிஎஸ்பி மணவாளன், ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் குணசேக ரன், தலைமைக் காவலர்கள் அரிகார்த்திக், தேவதாஸ், செல்லியம்மாள், மீரா உட் பட 11 பேர் மீது கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், 11 பேரில் 7 போலீஸார் உட்பட 9 பேர் செங்கல்பட்டில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் 1-ல் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய் தனர். மனுவை நேற்று விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராஜமாணிக்கம், 9 பேருக்கும் முன்ஜாமீன் அளித்து நேற்று உத்த ரவிட்டார்.