தமிழகம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது: மத நல்லிணக்கம் பேணப்படுவதாக ஆளுநர் பாராட்டு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மத நல்லிணக்கம் பேணப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 11.15 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது.

முன்னதாக, பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆளுநர் ரோசய்யா காலை 11.10 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்தார். சட்டப்பேரவை வாயிலில் அவரை பேரவைத் தலைவர் ப.தனபால், பேரவைச் செயலாளர் ஆகியோர் வரவேற்று அவைக்குள் அழைத்து வந்தனர். அவைக்குள் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆளுநரை வரவேற்றனர். பின்னர், பேரவைத் தலைவர் இருக்கையில் ஆளுநர் அமர்ந்தார்.

தொடர்ந்து, ஆளுநர் ரோசய்யா, தனது ஆங்கில உரையை படித்தார்.

அவர் கூறியதாவது:

"தமிழகத்தில் மத நல்லிணக்கம் பேணப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. இதற்காக பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கை சிறையில் அடைபட்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேர் மீட்கப்பட்ட தமிழக அரசு அறும்பாடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்காக ரூ.42.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களை உலக வங்கி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேளாண் உற்பத்தியில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப இது சரியான தருணம் அல்ல. இலங்கை தமிழர்கள் நலனுக்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் உரிய மரியாதையுடன் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

கச்சத்தீவில் மீன்பிடி உரிமையை நிலை நிறுத்துவதன் மூலமே தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 3315 மெகவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தியைப் பெருக்க ஜப்பான் நிறுவன உதவியுடன் ரூ.3572 கோடி செல்வில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நதிநீர் இணைப்புத் திட்டமே தீர்வாகும்.

மக்களுக்கு மின்னணு சேவைகளை வழங்குவதில் தமிழக அரசு முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளது.

கோயம்பேடு - ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை விரைவில் இயக்கப்படும். வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையேயான ரயில் சேவைக்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT