தமிழகம்

நிரந்தர தீர்வு கிடைக்காமல் தொடரும் அவலம்: கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க களமிறங்கிய கிராம மக்கள்

கரு.முத்து

அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து, அரசும் பலமுறை திட்டம் தீட்டியும் தடுப்பணை கட்டப்படாததால், கடல்நீர் உட்புகுவதைத் தடுக்க தாங்களே முன்வந்து தற்காலிக மண் அணையை அமைத்துள்ளனர் தலைஞாயிறு பகுதி மக்கள்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு பகுதியில் அரிச்சந்திரா நதி கடலில் கலக்கிறது. அந்த கழிமுகம் வழியாக ஆற்றுக்குள் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலும் கடல் நீர் உட்புகுந்து விடுகிறது. இந்த உப்பு நீர் ஆற்றின் வழியாக சுமார் 7 கி.மீ. தொலைவில் பிரிஞ்சுமூலை என்ற ஊரில் உள்ள நீர்த்தேக்கி வரை சென்று விடுகிறது. ஊருக்குள் உட்புகும் இந்த நீரால் வழியெங்கும் உள்ள கிணறு, குளம், குட்டை உள்ளிட்டவைகளில் உள்ள நீரும், கால்நடைகள்கூட குடிக்க இயலாத வகையில் உப்பு நீராக மாறிவிடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், இப்பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களும் உவர் நிலமாக மாறி பாழாகின்றன. இதைத் தடுக்க தடுப்பணை கட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2002-ம் ஆண்டில் சட்டப்பேரவை மனுக்கள் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு, இங்கு தடுப்பணை கட்ட ரூ.45 லட்சத்தில் உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை.

இதையடுத்து, 2007-ல் தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கதவணைக்கான மதிப்பீடு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து கடல் உப்பு நீர் ஊருக்குள் உட்புகுவதைத் தடுக்க மக்களே களமிறங்கியுள்ளனர்.

அரிச்சந்திரா நதியின் குறுக்கே மணலைக் கொண்டு தற்காலிக மண் கவணை (மண் அணை) ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். அதன் படி, தலைஞாயிறு மற்றும் அதைச் சுற்றியுள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முதலியப்பன் கண்டி என்ற இடத்தில் தற்காலிக மண் கவணை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து அணை கட்டும் பணியின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான சோமு.இளங்கோ கூறும்போது, “அரசைக் கேட்டு கேட்டு எதுவும் நடக்காத நிலையில் நாங்களே மண் கவணை அமைத்துக்கொள்வதை கடந்த 10 ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறோம். மழைக்காலம் வந்தால் இது தானாகவே கரைந்துவிடும். பிறகு அடுத்தாண்டு புதிதாக மண் கவணை அமைக்க வேண்டியுள்ளது.

எனவே, நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்துவதுபோல தடுப்பணை அல்லது கதவணை போன்ற நிரந்தரமான கட்டமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் மழைக் காலங்களில் வீணாகும் மழை நீரைச் சேமிக்கவும் கோடைக் காலத்தில் கடல் நீர் ஊருக்குள் உட்புகு வதைத் தடுக்கவும் பேருதவியாக இருக்கும். மேலும், இந்த பகுதியில் அனுமதியில்லாமல் அமைக்கப் பட்டுள்ள இறால் பண்ணைகளையும் அகற்ற வேண்டும்” என்றார்.

மக்கள் அமைக்கும் இந்த தற்காலிக மண் கவணையை சமூக விரோதிகள் சேதப்படுத்த வாய்ப் புள்ளதால் நாள்தோறும் 10 பேர் இரவில் முதலியப்பன் கண்டியில் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT