நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, மார்ச் 3-ல் தமிழகம் முழுவதும் பாமக போராட்டம் நடத்தவுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா மிகவும் ஆபத்தானது என்பதால் அதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி வரும் மார்ச் 03 ஆம் தேதி செவ்வாய்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்தில் நானும், பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்போம்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அவசரச் சட்டம் காலாவதியாக உள்ள நிலையில், அதற்கு பதிலாக புதிய சட்டத் திருத்த முன்வடிவை நாடாளுமன்றத்தில் கடந்த 24 ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. இது விவசாயிகளின் குரல் வளையை நெறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும்; இதை பா.ம.க கடுமையாக கண்டிக்கிறது.
இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினர் வேளாண்மையை தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1894 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை தான்அவ்வபோது சில திருத்தங்களைச் செய்து இதுவரை இருந்த அரசுகள் பயன்படுத்தி வந்தன.
அச்சட்டத்தில் நிலங்களுக்கான இழப்பீடு குறித்த பிரிவு அரசுக்கு சாதகமாகவும், உழவர்களுக்கு பாதகமாகவும் இருந்ததால் அதற்குப் பதிலாக இப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை பா.ம.க. நடத்தியது.
அதன்பின் கடந்த 2013 ஆம் ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட 'நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை - நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டம்'ஓரளவு திருப்தியளிக்கும் வகையில் இருந்தாலும், அதிலும் உழவர்களுக்கு சாதகமான சில திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என மைய அரசை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்து வந்தது.
ஆனால், மத்திய அரசு இப்போது கொண்டுவந்துள்ள சட்ட மசோதா இருக்கும் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு சட்டத்தின்படி அரசு - தனியார் துறை கூட்டாண்மைத் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அந்த நிலங்களின் உரிமையாளர்களில் 70 விழுக்காட்டினரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
ஆனால், இப்போது அந்த நிபந்தனை நீக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, நிலங்களை பெரிய அளவில் கையகப்படுத்தும் போது, அதனால் ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற பிரிவும் புதிய மசோதாவில் அகற்றப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, பாசன வசதியுள்ள பல்வகைப் பயிர்கள் விளையும் தன்மையுள்ள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று முந்தைய சட்டத்தில் இருந்த விதியும் நீக்கப்பட்டிருக்கிறது.
கையகப்படுத்தப்பட்ட இடம் 5 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை திரும்பவும் அவற்றின் முந்தைய உரிமையாளர்களிடமே வழங்க பழைய சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. அந்தப் பிரிவையும் மத்திய அரசு நீக்கியிருக்கிறது. சுருக்கமாக சொன்னால் மத்திய அரசு நினைத்தால் எந்த நிலத்தையும் விவசாயிகளிடமிருந்து பறித்து தனியார் பெருநிறுவனங்களுக்கு தாரை வார்க்க முடியும்; இதை உழவர்களால் எதிர்க்கக்கூட முடியாது.
தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இந்த நேரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக நிலம் எடுத்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது விவசாயிகளுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை உழவர்களிடம் இருந்து கட்டாயமாக நிலங்களை பறிப்பதை பா.ம.க. கடுமையாக எதிர்க்கிறது. தமிழகத்தில் டைட்டானியம் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்த முயன்றபோது அதை முறியடித்தது பா.ம.க. தான். சென்னை அருகே துணை நகரங்கள், விமானநிலைய விரிவாக்கம், மரக்காணம் அல்ட்ரா மின்நிலையம் போன்றவற்றுக்காக நிலங்களை கையகப்படுத்த அரசு முயன்றபோது உழவர்களுக்காக போராடி இந்த ஆபத்தை தடுத்து நிறுத்திய பெருமையும் பா.ம.க.வையே சாரும்.
இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா மிகவும் ஆபத்தானது என்பதால் அதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி வரும் மார்ச் 03 ஆம் தேதி செவ்வாய்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்தில் நானும், பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்போம்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.