தமிழகம்

சென்னையில் மோனோ ரயில் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல்

செய்திப்பிரிவு

சென்னையில் மோனோ ரயில் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று பேரவையில் போக்குவரத்து அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, "திண்டுக்கலில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவது தொடர்பாக திமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் இந்த ஆட்சியில் இன்னும் தொடங்கப்படவில்லை" என்று புகார் கூறினார்.

அதற்குப் பதில் அளித்த அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், "மக்களை ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டம் அது. அவசர அவசரமாக அடிக்கல் நாட்டினார்கள். மருத்துவக் கல்லூரிக்கு இடம் எங்கே? தேவையான நிதி ஒதுக்கப்பட்டதா?" என்றார்.

உடனே உறுப்பினர் ஐ.பெரியசாமி, "சென்னையில் 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு மோனோ ரயில் திட்டம் குறித்து அறிவித்தீர்கள், இன்னும் அந்த திட்டம் வரவில்லையே? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது போக்குவரத்து அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பதில் அளித்துப் பேசும்போது, மோனோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு இந்த திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT