`தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் தினக்கூலியாக பணியாற்றும் 30 தொழிலாளர் களுக்கு கடந்த 8 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை’ என புகார் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அவர்கள் மனு அளித்தனர்.
எம்.வின்சென்ட் தலைமையில் தொழிலாளர்கள் அளித்த மனு விபரம்:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கிய நாளில் இருந்து 14 ஆண்டுகளுக்கு மேலாக 30 பேர் தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் நீதிமன்றத்தை அணுகினோம். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமும் அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இருப்பினும் எங்களை இதுவரை பணிநிரந்தரம் செய்யவில்லை. மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலியும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. வழங்கி வந்த குறைந்தபட்ச கூலியையும் கடந்த 8 மாதங்களாக வழங்கவில்லை. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
ஆட்சியர் அறிவித்த தினக்கூலி எங்களுக்கு கிடைத்திடவும், கடந்த 8 மாதமாக வழங்காத சம்பளத்தை உடனே வழங்கவும் ஆவண செய்ய வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதை வேண்டும்:
அய்யனடைப்பு ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் வெ. சண்முகசுந்தரி மற்றும் பாரதிநகர் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
பாரதிநகர் மக்கள் அருகே யுள்ள அரசு நிலத்தை கடந்த 40 ஆண்டுகளாக பொதுப் பாதையாக பயன்படுத்தி வந்தனர். அப்பகுதியில் அறிவியல் ஆய்வு மையம் வரவிருப்பதாக அறிகிறோம். எனவே, இப்பகுதியில் நிரந்தரமாக பொது பாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.எக்ஸ்.வில்சன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு:
தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை ரவுண்டானா முதல் டேவிஸ்புரம் விலக்கு வரை அமைந்துள்ள சாலையில் லாரிகள் அதிகளவில் செல்வதால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும், ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது.
எனவே, இந்த வழியாக லாரிகள் செல்ல தடைவிதித்து, லாரிகளை மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியில்லாத வீட்டுமனை:
மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மச்சேந்திரன் அளித்த மனு:
கட்டாலங்குளம் ஊராட்சி க.சாயர்புரத்தில் ஜெபாநகர் பகுதியில் ஊராட்சி அனுமதி இல்லாத மனைப்பிரிவுக்கு, பசுமைத் திட்டத்தின் கீழ் வீடு பரிந்துரை செய்து, தற்போது வீ்ட்டுத் தீர்வையும் வழங்கிய ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.