மாணவர்களின் மோதல்களை தடுப்பது குறித்து கல்லூரி முதல்வர்களுடன் போலீஸார் நேற்று ஆலோசனை நடத்தினர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போது அதை சரிபார்த்து அனுப்ப வேண்டும். 50 மாணவர்களுக்கு ஒருவரை நியமித்து கல்லூரி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். கல்லூரி வளாகங்கள் மற்றும் விடுதிகளில் அடிக்கடி சோதனை நடத்தி ஆயுதங்கள் மற்றும் வெளியாட்கள் இருக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும்.
பேருந்து மோதல்களை தடுக்க மாணவர்களுக்கு தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். பெற்றோர் கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டும். வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அதன் நகல் கல்லூரிக்கு அனுப்பப்படும். அந்த மாணவர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். பேருந்து தின கொண்டாட்டங்களை தடுக்க வேண்டும்.