தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.வளர்மதி இன்று சட்டப் பேரவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
சட்டப் பேரவைத் தலைவர் அறையில், அவரது முன்னிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணியளவில் இந்திய அரசமைப்பிற்கிணங்க, சட்டப் பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி மொத்தம் 1,51,561 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் என்.ஆனந்த் 55,045 வாக்குகள் பெற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றார். பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியம் 5015 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.அண்ணாதுரை 1552 வாக்குகளும் பெற்றனர். 'நோட்டா'வுக்கு மொத்தம் 1919 வாக்குகள் கிடைத்தன. சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி 1167 வாக்குகள் பெற்றார்.