சென்னை புறநகர் ரயில்களை கால தாமதமின்றி குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதற்காக தெற்கு ரயில்வே கடந்த 7-ம் தேதி அறிவித்த புதிய ரயில் கால அட்டவணையில் ஏராள மான குளறுபடிகள் உள்ளன.
உதாரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு மாலை 3.50 மணிக்கு இயக்கப் பட்டு வந்த ரயில் (வண்டி எண்.66009) தற்போது 4.00 மணிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது. ஆனால், மாலை 4.00 மணிக்கு சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு ரயில் (66009) இயக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒரே நேரத்தில் எப்படி இரு ரயில்களை ஒரே வழித்தடத்தில் இயக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல், அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (43406) காலை 5.15 மணிக்கு இயக் கப்பட்டு வந்த ரயில் நேரம் தற் போது 5.25 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ரயில் காலை 6 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலை யத்தை வந்தடையும். ஆனால், காலை 6.00 மணிக்கு திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு (43206) ரயில் இயக்கப்படுகிறது.
மேலும், சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து இரவு 8.15 மணிக்குப் பிறகு அரை மணி நேரம் கழித்து 8.45 மணிக்குத்தான் அடுத்த ரயில் திருவள்ளூருக்கு இயக்கப்படுகிறது. இந்த அரை மணிநேர அளவை குறைத்து 15 நிமிட இடைவெளியில் திருவள்ளூருக்கு ஒரு ரயிலை இயக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கம் சார்பில் அண்மையில் ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
புதிய கால அட்டவணையின்படி, சென்ட்ரலில் இருந்து இரவு 8.45 மணிக்கு திருவள்ளூருக்கு இயக்கப்பட்டு வந்த ரயிலின் நேரம் தற்போது 8.55 மணியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், அரைமணி நேரத்துக்கு பதில் இனிமேல் 40 நிமிடங்கள் ரயில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், பயண நேரத்தை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக் கப்பட்டுள்ளது. இந்த புதிய நேர மாற்றம் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், காலதாமதமாக ரயில்கள் இயக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, சில ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ரயில் கால அட்டவணை தயாரிக்கும்போது மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்படுகிறது. அதையும் மீறி தற்போது சில தவறுகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து, மீண்டும் ஆய்வு செய்து திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.