தமிழகம்

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தீ விபத்து: விமானம் தரையிறங்கும்போது பரபரப்பு

செய்திப்பிரிவு

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் பறவைகளை விரட்ட பட்டாசு வெடித்ததால் தீ பிடித்தது. அப்போது, டெல்லியில் இருந்து 124 பயணிகளுடன் விமானம் தரையிறங்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை 10 மணியளவில் உள்நாட்டு விமான நிலைய முனையத்தின் ஓடுபாதை அருகே ஏராளமான பறவைகள் பறந்து கொண்டிருந்தன. இந்நிலையில், ஊழியர்கள் பட்டாசு வெடித்து பறவைகளை விரட்டிக் கொண்டிருந்தனர்.

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பறவைகள் பறக்கின்றன. இந்த பறவைகளை பட்டாசு வெடித்து விமான நிலைய ஊழியர்கள் விரட்டுவது வழக்கம்.

பட்டாசு வெடித்து பறவைகளை விரட்டிக் கொண்டிருந்தபோது டெல்லியில் இருந்து 124 பயணிகளுடன் வந்த ஒரு விமானம், சென்னை விமானம் நிலையம் அருகே வந்தது. விமானத்தை தரையிறங்குவதற்கான அனுமதியை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் வழங்கினர்.

விமானம் தரையிறங்க தாழ்வாக பறந்து கொண்டிருந்தபோது, பறவைகளை விரட்ட வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்து சிதறிய தீப்பொறிகள் ஓடுபாதை அருகே இருந்த காய்ந்த புல்வெளியில் பட்டு, புல்வெளி தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைப் பார்த்த கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானியை தொடர்பு கொண்டு தரையிறங்கும் நிலையில் இருந்த விமானத்தை மீண்டும் வானில் பறக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, விமானம் உயரப் பறக்கத் தொடங்கியது.

விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புல்வெளியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்ட பிறகே, டெல்லி விமானம் தரையிறங்கியது. இந்த தீ விபத்தால் 2 விமானங்கள் தரை இறங்குவதிலும், 3 விமானங்கள் புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது.

சரியான தருணத்தில் அதிகாரிகள் எடுத்த தக்க நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடு பாதையில் ஏற்பட்ட தீ விபத்தால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT