தமிழகம்

பயோ காஸ் மின்னுற்பத்தி நிலையம்: மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பயோ காஸ் மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை புளியந்தோப்பில் பயோ காஸ் மின்னுற்பத்தி நிலையம் சோதனை முறையில் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் வேலங்காடு மயான பூமி, ஓட்டேரி மயான பூமி, வானகரம் மயான பூமி ஆகிய இடங்களில் பயோ காஸ் நிலையம் அமைக்க மாநகராட்சியில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையங்கள் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் (பார்க்) தொழில்நுட்பத்துடன் செயல்படவுள்ளன. பார்க் அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட இடங்களை பார்வையிட்டபோது, அவை தேவைக்கேற்ற வகையில் இல்லை என்று கூறியிருந்தனர். எனவே, புதிய பயோ காஸ் மின்னுற்பத்தி நிலையத்தை அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகத்தில் அமைக்க மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நேற்று தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் குரு, திமுக மாமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூஸ், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் பி.தமிழ் செல்வன் ஆகியோர் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே அத்திப்பட்டு குப்பைக் கொட்டும் வளாகத்தில் சேகரிக்கப்படும் குப்பையால் அப்பகுதியினர் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பயோ காஸ் மின்னுற்பத்தி திட்டம் அவர்களை மேலும் பாதிக்கும் என்றும் உறுப்பினர்கள் கூறினர்.

அதற்கு பதிலளித்த மேயர், “இத்திட்டத்தில் குப்பை எங்கும் தேங்காது. இதுபோன்ற குறைகள் இருந்தால் அது குறித்து ஆய்வு செய்யப்படும்,” என்றார். அதன் பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT