தமிழகம்

வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் வன்முறை - எழும்பூரில் ஆயுதங்களுடன் மோதல்: இளம் வழக்கறிஞர் கொலை

செய்திப்பிரிவு

எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் முடிவு வெளியானபோது, இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கற்களாலும் ஆயுதங்களாலும் அவர்கள் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் இளம் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டார்.

சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. நீதிமன்ற வளாகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடர்ச்சியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்பதால் நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டிருந்தனர்.

பொருளாளர், செயலாளர் என ஒவ்வொரு பதவியிலும் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு சந்தன்பாபு - மைக்கேல் இடையே கடும் போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கை நடக்கும்போதே இருவரது தரப்பு வழக்கறிஞர்களும் மோதிக்கொண்டனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில், தலைவர் பதவிக்கான ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு நள்ளிரவு 1 மணி அளவில் முடிவு அறிவிக்கப்பட்டது. மைக்கேலுக்கு 360 வாக்குகள் கிடைத்தன. 386 வாக்குகள் பெற்று சந்தன்பாபு, தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் பட்டாசு வெடித்தனர்.

அப்போது இரு பிரிவினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. கற்கள், கம்பிகள், கத்தி, அரிவாளுடன் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் சந்தன்பாபுவின் ஆதரவாளரான ஸ்டாலின் (38) என்ற வழக்கறிஞரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில இடங்களில் வெட்டுக்காயமும் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். போலீஸாரும் சில வழக்கறிஞர்களும் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

2 வழக்கறிஞர்கள் கைது

இதுதொடர்பாக எழும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். லோகேஸ்வரி, முனியாண்டி ஆகிய 2 வழக்கறிஞர் களை கைது செய்துள்ளனர். வழக்கறிஞர்கள் மைக்கேல் உட்பட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஸ்டாலின் புதுச்சேரியை சேர்ந்தவர். இவரது மனைவி எலிசபெத். பொறியியல் படிக்கும் மகன், 10-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர்.

SCROLL FOR NEXT