சூளைமேட்டில் வழக்கறிஞர் ஒருவரை அவரது வீட்டு வாசலில் மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது. ஏற்கனவே, தாக்குதல் வழக்கில் இருமுறை கைதான இவரது கொலைக்கு முன் விரோதம் காரணமா? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை சூளைமேடு அவ்வைநகர் புதுமேற்கு தெருவில் வசிப்பவர் கதிரவன். இவரது தம்பி சந்திரன் என்ற பாபு (28). பாளையங்கோட்டை மற்றும் செங்கல்பட்டில் வழக்கறிஞர் படிப்பை முடித்து விட்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக சேர்ந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்த பாபு, மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்தி விட்டு, வீட்டுக்குள்ளே செல்ல முயன்றார்.
அப்போது வீட்டருகே இருந்த புதருக்குள் மறைந்திருந்த 4 பேர் ஓடிவந்து பாபுவை சரமாரியாக வெட்டினார்கள். கழுத்து, தலையில் பலமான வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாபு பரிதாபமாக உயிரிழந்தார். பாபு இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து ஒரு காரில் தப்பி சென்றுள்ளனர்.
சூளைமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து பாபுவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து விசாரித்து வரு கின்றனர்.
கொலைக்கான காரணம் என்ன?
போலீஸார் கூறுகையில், "சூளைமேட்டில் ஒரு மதுபான கூடத்தில் பார் வைத்திருக்கும் வீரக்குமார் என்பவருடன் 2010-ல் ஏற்பட்ட மோதலில் வீரக்குமாரை அரிவாளால் வெட்டியிருக்கிறார் பாபு. இதில் வீரக்குமார் சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்து விட்டார். அரும்பாக்கம் திடீர் நகரை சேர்ந்த உசேன் என்பவரையும் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் தாக்கியிருக்கிறார் பாபு. இந்த இரு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் இன்னமும் நடந்து வருகின்றன. இரு வழக்கிலும் பாபு கைது செய்யப்பட்டார். மோதலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பாபு கொலை செய்யப்பட்டாரா? அல்லது தன்னுடன் படித்த பெண் ஒருவருடன் பாபு தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண் விவகாரத்தில் பாபு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.