சென்னையில் 2 தொழிற் சாலைகளில் மின் திருட்டு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.11 லட்சம் இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க அவர்களிடம் இருந்து மேலும் ரூ.2.35 லட்சம் வசூலிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை பிரிவு பறக்கும் படையினர், சென்னை மின் பகிர்மான வட்ட (தெற்கு) அதிகாரிகளுடன் கடந்த 13-ம் தேதி திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது ஒரு ரப்பர் தொழிற்சாலையில் மின் திருட்டு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மின் திருட்டால் ரூ.8 லட்சத்து 6 ஆயிரத்து 148 மின்வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது கணக்கிடப் பட்டது. சம்பந்தப்பட்ட நுகர்வோ ரிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை முழுவதுமாக வசூல் செய்யப் பட்டது. குற்றவியல் நடவடிக் கையை தவிர்க்க முன்வந்து, அதற்கான சமரசத் தொகை ரூ.1.35 லட்சம் செலுத்தியதால் போலீஸில் புகார் செய்யப்படவில்லை.
அதேபோல, பறக்கும் படையி னர் சென்னை மின் பகிர்மான வட்ட (வடக்கு) அதிகாரிகளுடன் சேர்ந்து கடந்த 11-ம் தேதி திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் மின் திருட்டு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மின் திருட்டால் ரூ.3 லட்சத்து 1 ஆயிரத்து 290 மின்வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது கணக்கிடப்பட்டது. சம்பந்தப்பட்ட நுகர்வோரிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை முழுவதுமாக வசூல் செய்யப்பட்டது. குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்கான சமரசத் தொகை ரூ.1 லட்சம் செலுத்தியதால், போலீஸில் புகார் செய்யப்படவில்லை.
மின் திருட்டு பற்றிய புகார்களை 9444018955, 9445850452, 9445850453 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.