தமிழகம்

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.46 லட்சம் மோசடி செய்தவர் சென்னையில் கைது: போலி ஆவணங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி ரூ.46 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை யில் பல்லாவரம், குன்றத்தூர், ஆயிரம்விளக்கு ஆகிய இடங் களில் அவர் மாறி மாறி டிராவல்ஸ் அலுவலகம் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் திருமலாபுரத்தை சேர்ந்த அரிச்சந்திரன் என்பவர் உட்பட 20-க்கும் அதிகமானவர்கள் சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:

சென்னை குன்றத்தூரை சேர்ந்த முகமதுஜான் பாட்ஷா என்பவர் துபாயில் வேலை இருப்பதாக கூறினார். ரூ.14 லட்சம் பெற்றுக்கொண்டு எங்களை அங்கு அனுப்பினார். துபாய் சென்ற பிறகுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். அங்கு பல பிரச்சினைகளை சந்தித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளோம். எங்களை ஏமாற்றிய முகமதுஜானை சந்திக்கச் சென்றோம். அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து எங்களது பணத்தை திரும்ப பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில், முகமதுஜான் குறித்து பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. இதுபற்றி போலீஸார் கூறியதாவது:

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகத்தை ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனது வீட்டிலேயே முகமதுஜான் 2013-ல் நடத்தி வந்தார். சவுதிஅரேபியாவுக்கு இவர் அனுப்பிய 20 நபர்கள், அந்த நாட்டின் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் சென்னை வருவதற்குள் வீட்டை காலி செய்துவிட்டு முகமதுஜான் தலைமறைவாகிவிட்டார்.

பின்னர் குன்றத்தூர் அருகே சிக்கராயன்புரம் மூகாம்பிகை நகரில் புதிதாக ஒரு அலுவலகம் தொடங்கியுள்ளார். அங்கு சிலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களை துபாய்க்கு அனுப்பினார். அவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டதால், அந்த இடத்தையும் காலி செய்து ஆயிரம்விளக்கு புத்திபேகம் தெருவில் ‘டிராவல்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் மற்றொரு புதிய அலுவலகத்தை தொடங்கினார்.

முறையாக உரிமம் பெறாமல் 45-க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கனடா, துபாய், சவுதிஅரேபியா, சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உட்பட பல இடங்களுக்கு அனுப்பியுள்ளார். இவ்வாறு பலரிடம் ரூ.46.38 லட்சம் மோசடி செய்துள்ளார். அவரிடம் இருந்து போலி வெளிநாட்டு ஆவணங்கள், வேலைக்கான போலி அனுமதிக் கடிதங்கள் உட்பட பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகமதுஜான் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

SCROLL FOR NEXT