சிதம்பரத்தில் ஒரே நாளில் இரண்டு நாட்டியாஞ்சலி விழா நடப்பதால் எதை பார்த்து ரசிப்பது என்ற குழப்பத்தில் பொது மக்கள் உள்ளனர்.
கடந்த 33 ஆண்டுகளாக மகாசிவராத்திரி அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகர முக்கிய பிரமுகர்களால் அமைக்கப்பட்ட சிதம்பரம் நாட்டியாஞ்சலி டிரஸ்ட் என்ற அமைப்பு 5 நாட்கள் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தது. வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் இருந்து நாட்டியக் கலைஞர்கள் வந்து பரதம், குச்சிப்புடி, கதகளி, மோகினி ஆட்டம், கதக் போன்ற நாட்டியங்களை பக்தி பரவசத்துடன் ஆடி நடராஜபெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்துவார்கள். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடனத்தை பார்த்து மகிழ்வார்கள்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கோயில் நிர்வாகம் கடந்த ஆண்டு பொதுதீட்சிதர்களிடம் வந்தது. இதனை தொடர்ந்து தீட்சிதர்கள் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்த ஆண்டு மகாசிவராத்திரி அன்று கோயிலில் நாட்டியாஞ்சலி நடப்பதாக அறிவிப்பு பலகை வைத்தனர்.
மகாசிவராத்திரியான நாளை (பிப்.17-ம் தேதி) முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடக்கும் நாட்டியாஞ்சலி விழாவில் யார், யார் கலந்து கொண்டு எந்தெந்த நேரத்தில் நாட்டியம் ஆடுகிறார்கள் என்று அழைப்பிதழ் அச்சிட்டு அனைவருக்கும் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் நிர்வாகிகள் வழங்கினர்.
இதற்கிடையே சிதம்பரம் நாட்டியாஞ்சலி டிரஸ்ட் நிர்வாகிகள் தங்களது 34-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்குவீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெறும் என்று அறிவித்தனர். மேலும் யார்,யார் கலந்து கொண்டு எந்தெந்த நேரத்தில் நாட்டியம் ஆடுகிறார்கள் என்று அழைப்பிதழ் அச்சிட்டு அனைவருக்கும் கொடுத்துள்ளனர்.
தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் நிர்வாகிகள் நாட்டியாஞ்சலி விழாவுக்காக கோயிலினுள் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று நாட்டியாஞ்சலி டிரஸ்ட் நிர்வாகிகள் கோயிலின் வெளியே தெற்குவீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் மேடை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். 5 நாட்களும் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை இரண்டு இடங்களிலும் நாட்டியாஞ்சலி நடப்பதால் எதை பார்ப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள்.
இந்நிலையில் கோயில் புராணத்துக்கும், இறையாண்மைக்கும் எதிரானது நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி என்று தொடர்ந்து எதிர்த்து வரும் கைலாசங்கர் தீட்சிதர், இரு அமைப்பை சேர்ந்தவர்களும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்.