சென்னையில் மே மாதம் நடக்கவுள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னை யில் மே 23, 24-ம் தேதிகளில் நடக்கவுள்ளது. இதுதொடர்பான முன்னோட்டக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
கடந்த 1992, 2003, 2014-ம் ஆண்டுகளில் புதிய தொழில் கொள்கைகளை தொலைநோக்கு சிந்தனையோடு ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆட்டோ மொபைல் மற்றும் மின்னணு துறையில் தமிழகம் மாபெரும் புரட்சி படைக்க அந்த கொள்கைகள் வழிவகுத்தன. ஃபோர்டு, ஹூண்டாய், ரெனால்டு-நிஸான், டெல், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்தன. அதன் விளைவாக, இன்றைக்கு ஆட்டோமொபைல், மின்னணு மற்றும் ஹார்ட்வேர் உற்பத்தியில் சென்னை முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்வோர் அதிகம் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பொருளாதார, சமூக, உள்கட்டுமான வளர்ச்சி அளவுகோளில் தமிழகம் சிறந்து விளங்குவதே இதற்குக் காரணம். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றும் நோக்கில் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ஐ ஜெயலலிதா வெளியிட்டார். 2023-க்குள் தமிழகத்தில் தனிநபர் வருமானத்தை 10 ஆயிரம் டாலர் அளவுக்கு உயர்த்துவதும், வறுமை இல்லாத, முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதும் இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு.
ஜெயலலிதாவின் தொலை நோக்கு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மே 23, 24-ம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் தமிழக அரசு நடத்த உள்ளது. இதன்மூலம் குறைந்தபட்சம் ஒரு லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று அரசு எதிர்பார்க்கிறது. அனைத்து புதிய தொழில் திட்டங்களுக்கும் ஒற்றைச்சாளர முறையில் ஒரே மாதத்தில் அனுமதி வழங்கப்படும். தொழில் நிறுவனங்கள் அரசு அனுமதி பெறுவதற்கு உதவுவதற் காக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர்.
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன், முருகப்பா குழுமத் துணைத் தலைவர் எம்.எம்.முருகப்பன், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூ சன்ஸ் (சிடிஎஸ்) துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், ரெனால்டு நிசான் நிர்வாக இயக்குநர் டோஷிஹிகோ சானோ, மஹிந்திரா ஆட்டோமொபைல் செயல் இயக்குநர் பவன் கோயங்கா, செயின்ட் கோபைன் கிளாஸ் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் பி.சந்தானம் ஆகியோர் பேசினர். முன்னதாக, தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் வரவேற்றார். தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலர் சி.வி.சங்கர், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு குறித்த அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் துணைத்தலைவர் எம்.வேல்முருகன் நன்றி கூறினார்.