தமிழகம்

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் தோரணங்களுடன் களை கட்டும் கிராமங்கள்

செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கிராமப் புறங்களில் இடைத்தேர்தலை யொட்டி திமுக மற்றும் அதிமுகவினர் கொடிகள் மற்றும் தோரணங்களை கட்டி தேர்தலை திருவிழாவைப் போல மாற்றியுள்ளனர்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்.13-ம் தேதி நடைபெறவுள்ளது. அதிக அளவில் கிராமப்புறங்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் 2,63,670 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் 25 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 29 பேர் களத்தில் உள்ளனர்.

தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் கிராமப்புறங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் அதிக அளவில் தங்களது கட்சிக் கொடிகளைக் கட்டி தேர்தலை திருவிழாவாக மாற்றியுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி, திமுக வேட்பாளர் என்.ஆனந்த் ஆகியோர் தொகுதி முழுவதும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தற்போது விடுபட்ட இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக, திமுக சார்பில் களமிறங்கியுள்ள தேர்தல் பணிக்குழுவினர் அந்தந்த பகுதிகளில் முகாமிட்டு, தங்களது வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாமதமாக பிரச்சாரத்தைத் தொடங்கிய பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.அண்ணாதுரை ஆகியோர் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி யுள்ளனர்.

கிராமப்புறங்களில் பெரும் பாலும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் கொடிகள் மற்றும் தோரணங்களே அதிக அளவில் காணப்படுகின்றன. பல கிராமங்களில் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சார்பில் சுவர் விளம்பரங்கள் கொடிகள், தோரணங்கள் இல்லாததால் பிரச்சாரத்துக்கான சுவடே தெரியவில்லை.

மாநகரப் பகுதியான ஸ்ரீரங்கத்தில் பாஜகவினர் கொடிகள், தோரணங்களைக் கட்டியுள்ளனர்.

SCROLL FOR NEXT