தமிழகம்

ஆப்கனில் தீவிரவாதிகள் கடத்திய தமிழக பாதிரியார் பிரேம்குமார் விடுதலை

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் 8 மாதங்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை தமிழகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் விடுவிக்கப்பட்ட இந்தத் தகவலை, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழகத் தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ் தவ பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் (47) கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி தீவிரவாதிகளால் ஹெராத் பகுதியில் கடத்தப்பட்டார்.

அவரை பத்திரமாக மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து பாதிரியாரை மீட்க ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், தமிழக பாதிரி யார் மீட்கப்பட்டது பற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, "ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமாரிடம் பேசினேன். அவர் நலமுடன் பாதுகாப்பாக இருக்கிறார். 8 மாதங்களுக்குப் பிறகு அவர் திரும்பும் தகவல், அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT