தமிழகம்

கொசுப்புழுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்

அ.அருள்தாசன்

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு காரணகர்த்தாவான கொசுக்களின் லார்வாக்களை சாப்பிடும் தன்மை கொண்டவை கம்பூசியா மீன்கள். 5 செ.மீ. நீளம் வரை மட்டுமே வளரும் இந்த மிகச்சிறிய மீன்கள், பாளையங்கோட்டை மண்டல பூச்சியியல் துறை சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

டெங்கு விழிப்புணர்வு

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒருசில பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர். மண்டல பூச்சியியல் துறை சார்பில் டெங்கு கொசு புழுக்கள், அவற்றை உண்ணும் கம்பூசியா மீன்கள், புகை மருந்து தெளிக்கும் தெளிப்பான், வீடுகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நன்னீர் தேங்கும் தேவையற்ற பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சியில் சிறிய பாத்திரத்தில் நன்னீரில் நீந்திய கம்பூசியா மீன்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. மனிதர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள டெங்கு கொசுக்களை இயற்கை வழியில் அழித்தொழிக்கும் மிகப்பெரிய பணியில் இந்த சிறிய அளவிலான மீன்கள் ஈடுபடுகின்றன.

கொசுப்புழுவை தடுக்கலாம்

இந்த மீன்களின் தன்மை குறித்து பூச்சியியல் துறை அலுவலர்கள் கூறும்போது, ‘இந்த வகை மீன்களை மேட்டூர் அணைப்பகுதியில் வளர்த்தெடுக்கிறார்கள். அங்கிருந்து பாளையங்கோட்டை கொண்டுவரப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கொடுக்கிறோம்.

அரசுத்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் வைத்திருக்கும் அலங்கார தொட்டிகள், அலங்கார நீரூற்றுகள், நன்னீர் குடுவைகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புகள் அதிகம். எனவே அவற்றில் விட இந்த வகை மீன்களை வழங்குகிறோம்.

மாநகராட்சி, நகராட்சிகளில் விநியோகிக்கும் குடிநீர் குளோரினேட்டம் செய்யப்படுவதால் அவற்றில் இந்த மீன்கள் வாழாது. இதுபோல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் வாழாது. கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இவற்றைவிட்டால் கொசுப்புழுக்கள் உருவாகாமல் தடுக்க முடியும் ’ என்று தெரிவித்தனர்.

அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு மட்டும் இவற்றை வழங்காமல் நன்னீர் தேக்கி வைக்கப்படும் அனைத்து பகுதிகளுக்கும் இந்தவகை மீன்களை கொண்டுசென்று வளர்த்து கொசுக்களை இயற்கையாகவே கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SCROLL FOR NEXT