தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 9 பேர் நேற்று விடுதலை செய்யப் பட்டனர்.
திண்டுக்கல், நந்தவனம் பட்டியில் வசித்து வந்த பசுபதி பாண்டியன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஒரு வழக்கில் ஆஜராவதற்காக, தனது மனைவி ஜெசிந்தா பாண்டியனுடன் கடந்த 2006 ஏப்ரல் 7-ம் தேதி காரில் தூத்துக்குடிக்கு வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் பாலம் அருகே காலை 9.45 மணியளவில் வந்தபோது, லாரியை குறுக்கே நிறுத்தி ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது. லாரியில் இருந்து இறங்கிய நபர்கள் கார் மீது வெடிகுண்டுகளை வீசினர். காரில் இருந்தவர்கள் அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டனர்.
பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பசுபதி பாண்டியன் லேசான காயத்துடன் காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். காரில் அவர்களுடன் வந்த முனியசாமி, ஜாகீர் உசேன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் திண்டுக்கல் நந்தவனம்பட்டியில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி பசுபதி பாண்டியனும் கொலை செய்யப்பட்டார்.
ஜெசிந்தா பாண்டியன் கொலை தொடர்பாக, சுபாஷ் பண்ணையார், செ.தனசிங், ச.சுரேஷ், ரா.தாத்தா செந்தில், மாயாண்டி, கா.சிவலிங்கம், தே.அருள்ராஜ், ந.மோகன், ஞா.அந்தோணி, ரோ.வளன், த.தாராசிங், ஜெ.குமார் ஆகிய 12 பேர் மீது எப்போதும் வென்றான் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவர்களில் மாயாண்டி இறந்துவிட்டார். தாத்தா செந்தில், வளன் ஆகிய இருவர் மீதான வழக்குகள் தனியாக பிரிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்ற 9 பேர் மீதான வழக்கு தனியாக நடைபெற்று வந்தது.
அரசு தரப்பு சாட்சியான ஜாகீர் உசேன் என்பவர் தன்னிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதன் காரணமாக வழக்கில் தீர்ப்பு வழங்குவது தாமதமானது.
ஜாகீர் உசேனிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ஜாகீர் உசேன் கடந்த 11.2.2015-ல் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி எம்.பால்துரை பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 9 எதிரிகளும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். 11 மணியளவில் தீர்ப்பை வாசித்த நீதிபதி பால்துரை, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் 9 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.