‘தமிழகத்தில் பாமக ஆட்சி மலரும்’ என்று எம்.பி. அன்புமணியும், ‘நாங்கள் ஆட்சியில் அமரவில்லை என்றாலும், பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக செயல்படுகிறோம்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸூம் சேலத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்தனர்.
பாமக தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் சேலம் நேரு கலையரங்கில் நேற்று நடந்தது. பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ச.வடிவேல் ராவணன் வரவேற்றார். கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது: பாமகவைத் தொடங்கி 26 ஆண்டுகளாக தமிழக மக்களுக்காகப் போராடி வருகிறோம். நாங்கள் ஆட்சியில் அமரவில்லை என்றாலும், எதிர்க்கட்சி பொறுப்புடையவர்களாக செயல்படுகிறோம்.
2016-ல் தமிழகத்தை ஆளும் நிலையில், எங்களுடைய கட்சி ஒட்டுமொத்த மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். தமிழகத்தில் உள்ள 5.20 கோடி வாக்காளர்களை, தொண்டர்கள் நேரடியாக சந்தித்து தமிழகத்தில் மாற்றம் ஏன் வேண்டும், எதற்காக வேண்டும் என்பதை எடுத்து சொல்ல வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
தமிழக மக்களின் மனநிலை மாறியுள்ளது. அடுத்து யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திமுக, அதிமுக என்று மாறி மாறி ஆட்சி செய்ததை வெறுத்து அடுத்த மாற்றம் வருமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில், டெல்லியைப் போல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாமக ஆட்சி மலரும்.
கடந்த 50 ஆண்டு கால திமுக, அதிமுக ஆட்சியாளர்கள் தமிழக உரிமைகளை தாரை வார்த்துள்ளனர். காவிரி உரிமையை தாரை வார்த்ததுபோல், தற்போது மேகேதாட்டுவில் அணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பாமக ஆட்சிக்கு வந்து ஒரு மணி நேரத்தில் போடும் மதுவிலக்கு கையெழுத்து நாட்டின் தலையெழுத்தை மாற்றும். அடுத்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.
பாமக தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் இல்லாமல் பல சாதனை செய்துள்ளது. பல உயிர்களை இழந்து எம்.பி.சி. இடஒதுக்கீட்டை பெற்றது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி கொண்டு வந்தது. நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 2 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட காரணமாக இருந்தது மருத்துவர் ராமதாஸ். வரும் தேர்தலில் மக்கள் பாமகவுக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளனர். கடந்த பொதுக்குழுவில் எடுத்த தீர்மானத்தின்படி திமுக, அதிமுக தவிர, பாமக தலைமையில் மாற்று அணி அமைக்கப்படும்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.
கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, அரங்க.வேலு, மாநில துணை பொதுச் செயலாளர்கள் அ.தமிழரசு, க. சண்முகம், மாநில துணைத் தலைவர்கள் மு. கார்த்தி, பெ.கண்ணையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை சேலத்தில் பாமக மாநாடு நடந்தது.