தமிழகம்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: வங்கி ஊழியருக்கு 15% ஊதிய உயர்வு - 4 நாள் வேலைநிறுத்தம் வாபஸ்

செய்திப்பிரிவு

மும்பையில் நடந்த பேச்சு வார்த்தையில், வங்கி ஊழியர் களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வங்கி ஊழியர் தொழிற்சங்கத்தினர் அறிவித் திருந்த 4 நாள் தொடர் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு சுமார் 50 ஆயிரம் கிளைகள் உள்ளன. இதில் 8 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்படும். இதன்படி, கடந்த 2012 நவம்பரில் வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஊதிய உயர்வு அளிக்கப்படாததால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கி ஊழியர் சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாள் வேலை, நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், மருத்துவ உதவி திட்டத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25 முதல் 28-ம் தேதி வரை தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இதையடுத்து மும்பையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்த தொடர் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

மும்பையில் வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கும், இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 15 சதவீத ஊதிய உயர்வு, மாதத்தில் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை, மற்ற சனிக்கிழமைகளில் முழு நேர வேலை என இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர்.

இதை ஏற்றுக்கொண்டு, பிப்ரவரி 25-ம் தேதி தொடங்க இருந்த 4 நாள் தொடர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொண்டோம். 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம், இந்திய வங்கிகள் சங்கத்துக்கு ஆண்டுக்கு ரூ.4,725 கோடி செலவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT