சென்னையில் உள்ள 92 நடுநிலைப் பள்ளிகளுக்கு எல்.சி.டி ஒளிப்பட சாதனங்கள் வழங்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக எல்.சி.டி தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது. ஆனால், மாணவர்களின் தேவையை கருதி எல்.சி.டி ஒளிப்பட சாதனங்கள் வழங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தி.நகர் போக் சாலையில் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்த மூன்று டி.யு.சி.எஸ். நியாய விலைக் கடைகளை தாமஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கூடத்துக்கு மாற்றுதல், இரவு நேர காப்பகங்கள் அமைக்க ஏழு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்தல், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிறுத்தங்களில் விளம்பர பலகைகளை மூன்று ஆண்டுகளுக்கு வைத்துக் கொள்ள பொது ஏல முறையினை பின்பற்றுதல் உள்ளிட்ட 45 தீர்மானங்கள் நேற்று நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.