தமிழகம்

அம்மா சிமென்ட் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 மூட்டை நிபந்தனையை தளர்த்த வேண்டும்: தி இந்து ‘உங்கள் குரல்’ சேவையில் கோரிக்கை

செய்திப்பிரிவு

அம்மா சிமென்ட் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 மூட்டைகள் வாங்கவேண்டும் என்ற நிபந்தனையை அரசு தளர்த்த வேண்டும் என்று ‘தி இந்து உங்கள் குரல்’ சேவையில் வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன் கலந்துபேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மா சிமென்ட் திட்ட அதிகாரிகள் கூறினர்.

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வீடு கட்டும் சாமானிய மக்கள் அதிக செலவுக்கு ஆளாகின்றனர். மக்களுக்கு குறைந்த விலையில் தரமான சிமென்ட் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் ‘அம்மா சிமென்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சிமென்ட் ரூ.190-க்கு விற்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்ட கிடங்குகள் வாயிலாக சிமென்ட் விற்கப்படுகிறது. குறைந்தது 10 மூட்டைகள், அதிகபட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அம்மா சிமென்ட் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 மூட்டைகள்தான் வாங்க முடியும் என்பதால், சிறிய அளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்பவர்கள் வாங்க முடிவதில்லை. இக்கருத்தை சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த விஜயசேனன் என்ற வாசகர், ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையில் பதிவு செய்தார்.

அவரை தொடர்புகொண்டு பேசியபோது, ‘‘சாதாரணமாக வீட்டில் சிறிய பழுதுபார்ப்பு வேலைகளுக்கு ஒன்றிரண்டு சிமென்ட் மூட்டைகள் இருந்தால் போதும். ஆனால், அம்மா சிமென்ட் திட்டத்தில் 10 மூட்டைகளுக்கு குறைவாக கொடுக்கமாட்டார்கள். எனவே, தனியார் கடைகளில் அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. அம்மா சிமென்ட் விற்பனைக்கான குறைந்தபட்ச நிபந்தனையைத் தளர்த்தினால், மேலும் பல சாமானிய மக்கள் பயனடைவார்கள்’’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அம்மா சிமென்ட் திட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கூறியபோது, ‘‘அரசின் தொழில் துறை பிறப்பித்த அரசாணையில் குறைந்தபட்சம் 10 மூட்டைகள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், குறைந்தபட்ச நிபந்தனையை தளர்த்துவதால் மேலும் பலர் பயனடைவார்கள் என்கிற பட்சத்தில், நிபந்தனையை கட்டாயம் தளர்த்தலாம். இதுகுறித்து உயரதிகாரிகளுடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT