தமிழகம்

நெல்லையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை: ஆட்டோ எரிப்பு, பேருந்துகள் மீது கல்வீச்சு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தச்சநல்லூர், தேனீர்குளம் தெற்கு தெருவை சேர்ந்த செல்லையாவின் மகன் பொன்னையா(24). ஆட்டோ ஓட்டுநர்.

நேற்று காலையில் வண்ணார்பேட்டை சாலையில் வந்த போது, அவரது ஆட்டோவை வழிமறித்து 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் அவரை சராமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. பொன்னையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே இச்சம்பவம் குறித்த தகவல் தச்சநல்லூர் பகுதியில் பரவியதும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மறியல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியிலுள்ள சில வீடுகளை ஒரு கும்பல் அடித்து சேதப்படுத்தியது. 2 அரசு பஸ்களும் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தச்சநல்லூர் சீனியப்பன் திருத்து வடக்கு தெருவில் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவுக்கு தீ வைக்கப்பட்டது. 2 மணி நேரமாக மறியல் நீடித்ததை அடுத்து திருநெல்வேலி - சங்கரன்கோவில் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் ராமையன்பட்டி, டவுன் வழியாக மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸாரும் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி யும் அவர்கள் கலைந்து செல்ல வில்லை. கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளைப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மறியலை கைவிட மறுத்ததை அடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தச்சநல்லூரில் ஆட்டோ ஓட்டுநர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற சாலை மறியல்.

SCROLL FOR NEXT