தமிழகம்

தாறுமாறாக காரை ஓட்டிய சென்னை பொறியாளர் ஏரிக்குள் மூழ்கி பலி: மூதாட்டியும் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மன்னார்குடி அருகே நேற்று முன்தினம் இரவு தாறுமாறாக காரை ஓட்டி, விபத்துகளை ஏற்படுத்திய சென்னை பொறியாளர் ஏரியில் மூழ்கி பலியானார். கார் மோதியதில் மூதாட்டி ஒருவரும் உயிரிழந்தார்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஆனந்தராஜ் (35). கட்டுமானப் பொறியாளரான இவர் சென்னையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்துள்ளார். புதுச்சேரிக்குச் சென்று கட்டுமானப் பணிக்கான மின் சாதனங்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊரான பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடுக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

இவர் ஓட்டி வந்த கார் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடியை அடுத்துள்ள சுந்தரக்கோட்டை தனியார் மகளிர் கல்லூரி அருகே வந்தபோது, சாலை ஓரத்தில் நடந்து சென்ற மூதாட்டி மீது மோதியது. பின்னர், கண்டிதம்பேட்டை என்ற இடத்தில் வினோத்குமார் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காரை விரட்டிச் சென்றனர். இந்த நிலையில் கூப்பாச்சிக்கோட்டை என்ற இடத்தில் சாலை ஓர மரத்தில் மோதியதில் கட்டுபாட்டை இழந்த கார், அருகில் இருந்த ஏரியில் பாயந்து மூழ்கியது. இதில் நீரில் மூழ்கி ஆனந்தராஜ் பலியானார்.

பரவாக்கோட்டை போலீஸார் கிராமத்தினர் உதவியுடன் ஆனந்தராஜ் சடலத்தை ஏரியிலிருந்து மீட்டனர்.

முன்னதாக ஆனந்தராஜின் கார் மோதியதில் சாலையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வினேத்குமாருக்கு காயமேற்பட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

காரில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மதுபாட்டிகள் சில இருந்துள்ளன.

ஆனந்தராஜ், சொந்த ஊரில் கட்டும் வீட்டுக்கான பொருள்களை வாங்கிக் கொண்டு, மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்ததால் தொடர் விபத்துகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT