தமிழகம்

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது வழக்கு தொடருவேன்: டிராபிக் ராமசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று டிராபிக் ராமசாமி கூறினார்.

ஸ்ரீரங்கம் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் அவர் நேற்று திருச்சியில் செய்தியா ளர்களிடம் கூறியது: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக-வினர் அப்பட்டமாக விதிகளை மீறுகின்றனர். வேஷ்டி-சேலை, உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் வீடுவீடாக வழங்கப்படுகின்றன. இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் செய்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

அமைச்சர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் அரசு வாகனங்களில் கட்சிக் கொடியைக் கட்டிக்கொண்டு வாக்கு சேகரிக்கின்றனர். தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக அதிமுக, திமுக-வினர் தொடர்ந்து செயல்படுகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் எந்த நடவடிக்கையுமே எடுப்பதில்லை.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே திருட்டு மின்சாரம் மூலம் கட்சி அலுவலகங்களிலும், சாலைகளிலும் மின் விளக்குகள் அமைத்துள்ளனர். இதுகுறித்து மாநகர காவல் ஆணையரிடம் போன் மூலம் புகார் செய்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

போக்குவரத்து விதிகளை மீறியும், சட்டத்துக்குப் புறம்பாகவும் அமைக்கப்பட்டுள்ள பேனர்களை போலீஸார் அகற்ற வேண்டும். பேனர்களை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் கடமையைச் செய்யாததால், நான் அந்த வேலையைச் செய்தேன். அதற்காக என் மீது தில்லைநகர், கோட்டை காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆளுங் கட்சியினரின் அராஜகத்துக்கு போலீஸார் துணைபோகின்றனர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு 8 புகார்களை அனுப்பியுள்ளேன். அதன் காரணமாகவே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா ஆய்வுக்காக திருச்சிக்கு வந்துள்ளார்.

முறைகேடுகள் தொடர்பாகவும், அவற்றை தடுக்கத் தவறிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் திங்கள்கிழமை வழக்கு தொடர உள்ளேன். இந்த வழக்கு முடியும் வரை ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைப்பேன் என்றார்.

தேசிய மக்கள் கட்சி ஆதரவு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிராபிக் ராமசாமிக்கு தேசிய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மாநில அமைப்பு செயலர் கருணாகரன் நேற்று டிராபிக் ராமாசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும், அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார்

SCROLL FOR NEXT