ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் மீறி வருகின்றன என பாஜக சார்பில் தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக தேர்தல் பணிக்குழுத் தலைவர் இல.கண்ணன் மற்றும் பாஜக மாநிலச் செயலர் கே.டி.ராகவன் ஆகியோர் தேர்தல் பொதுப் பார்வையாளர் பால்கார் சிங்கிடம் நேற்று முன்தினம் இரவு அளித்த மனு விவரம்:
ஸ்ரீரங்கம் மாநகரப் பகுதியில் உள்ள சாலைகளில் எவ்வித அனுமதியும் பெறாமல் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் சார்பில் ஏராளமான கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்பதால், அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
கொடிகள் மற்றும் தோரணங்களைக் கட்டியுள்ள கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் இதற்கான செலவினத்தையும் தேர்தல் நடத்தும் அலுவலரும், தேர்தல் பொதுப் பார்வையாளரும் கவனத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.
ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் அதிமுக மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளின் கார்கள் நூற்றுக்கணக்கில் வலம் வருகின்றன. இவற்றுக்கு எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை.
வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை
இந்த விஷயத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், தேர்தல் பார்வையாளரும் மவுனப் பார்வையாளர்களாக இருப்பது ஏன் எனத் தெரியவில்லை. மேலும், இக்கட்சியினர் வேட்டி, சேலை, பணம் ஆகியவற்றை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
எனவே, தேர்தல் விதிமுறைகளை மீறும் இந்த கட்சிகள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.