காங்கிரஸில் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
தமிழக காங்கிரஸ் அமைப்பை சீரமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தேசிய செயலாளர் சின்னா ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தென்சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, திருவள்ளூர், மதுரை, விருதுநகர் என 11 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று கருத்துக்களை கூறினர்.
கட்சியை சீரமைப்பது தொடர்பாக முகுல் வாஸ்னிக்கிடம் நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. அதற்குள் கட்சியை தயார்படுத்த வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் காங்கிரஸின் மூத்த தலைவர்களைக் கொண்டு கூட்டங்கள் நடத்த வேண்டும். கட்சியில் கோஷ்டி பேதமின்றி எல்லோருக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முக்கியமாக கட்சிப் பதவி மற்றும் தேர்தலில் இளைஞர்கள், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மாணவர்களை கட்சியில் பெரியளவில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்தை அறிக்கையாக தயாரித்து கட்சியின் தேசியத் தலைமையிடம் முகுல் வாஸ்னிக் அளிக்கவுள்ளார். இந்தக் கூட்டம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:
கட்சியை சீரமைப்பது தொடர் பாக மாவட்ட நிர்வாகிகளிடம் தனித்தனியாக ஆலோசனைகள் கேட்டோம். தமிழகத்தில் காலியாக உள்ள நிர்வாகிகள் பதவிகளை காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவின் பேரில் விரைவில் நிரப்புவோம். பிரதமராக இருந்த வாஜ்பாய் ஓய்வெடுக்கும்போது, ராகுல் காந்தி ஒரு சில நாட்கள் மட்டுமே ஓய்வெடுப்பதில் என்ன தவறு உள்ளது?
தமிழகத்தில் லஞ்சம் வாங்கி கொடுப்பதற்காகவே அதிகாரிகளை அமைச்சர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் திருநெல்வேலியில் வேளாண் துறை பொறியாளர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.