தமிழகம்

தமிழை படிப்பது பெருமையளிக்கிறது’: மலேசிய தமிழ் மாணவர்கள் பெருமிதம்

செய்திப்பிரிவு

தமிழ் மொழி இலக்கியங்களைப் படிப்பது பெருமைக்குரிய விஷயம் என்று நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரிக்கு வருகை தந்துள்ள மலேசிய தமிழ் மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் பயிற்சி பெறுவதற்காக மலேசியாவில் உள்ள சுல்தானியா இட்ரீஸ் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 30 பேர் தமிழகம் வந்துள்ளனர். 21 நாட்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

முதலாவதாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 10 நாட்கள் தங்கி பயிற்சி பெற்றனர். அதைத் தொடர்ந்து நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் கடந்த 2 நாட்களாக பயிற்சி பெற்றனர். விரைவில், காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்துக்குச் செல்லவுள்ளனர்.

தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசிய மாணவ, மாணவியரை பேராசிரியர் தா.நீலகண்டபிள்ளை வரவேற்றார். கல்லூரி ஆட்சிக் குழு துணைத் தலைவர் கோபாலன் தலைமை வகித்தார். சுல்தானியா இட்ரீஸ் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் சாமிக்கண்ணு முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை பேராசிரியர் உதயசூரியன் அறிமுக உரையாற்றினார். இந்து கல்லூரி பேராசிரியர் ஐயப்பன் நன்றி கூறினார்.

மலேசிய மாணவி கயல்கனி தாத்ராவ் கூறும்போது, “எங்களின் மூதாதையர்கள் தமிழகத்திலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் குடியேறினர். இப்போது, தமிழகத்தில் எங்களின் ஊர் எது என்பது தெரியாது. தஞ்சாவூர் பெரிய கோவிலை தமிழினத்தின் கலாச்சார சின்னமாக சிறு வயதில் படித்திருக்கிறோம். அதை நேரில் பார்த்தபோது பிரமிப்பை ஏற்படுத்தியது. தமிழச்சியாக இருப்பது பெருமையாக உள்ளது” என்றார்.

மலேசிய மாணவர் மோகீஸ்வரன், தமிழகத்தில் உள்ள பேச்சாளர்களுக்கு இணையாக தெள்ளத்தெளிவாக தமிழ் உரையாற்றினார். அவர் கூறும்போது, “தமிழ் மொழியை காக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். தமிழனாக இருப்பதும், தமிழை படிப்பதும் பெருமைக்குரிய விஷயம். எங்களது வீட்டில் தமிழ் மொழிதான் பேசுவோம். இங்கு வந்த பின்பு அற இலக்கியங்களின் அறிமுகமும், அதன் மூலம் தமிழை ஆழமாக படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மலேசியாவில் தற்போது அதிக அளவில் பெண்கள் தமிழ் படிக்கிறார்கள். அங்கு ஆரம்ப பள்ளியை தாய் மொழியிலேயே படிக்கும் வசதி இருக்கிறது.

தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தால் இலங்கையில் போர் நடந்திருக்காது. அங்கு போர் நடந்தபோது, தமிழகத்திலும், மலேசியாவிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நமது சகோதர சகோதரிகள் இலங்கையில் பாதிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து அனைவரும் குரல் கொடுத்திருக்க வேண்டும்.” என்றார்.

SCROLL FOR NEXT